மிசிசாகா: பட்டப்பகல் சூட்டுச் சம்பவம்: இருவர் கைது, ஒருவர் தேடப்படுகிறார்

கடந்த திங்கட்கிழமை பட்டப்பகல் வேளையில் மிசிசாகாவில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும், மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மிசிசாகாவின் Dundas Street East மற்றும் Cawthra வீதிப் பகுதியில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மிசிசாகாவைச் சேர்ந்த 32 வயதான மைக்கல் டியபைத்துவா ஸ்கூல்ட் என்பவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அருகில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் பலரும் இருந்த வேளையில், அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், தாக்குதலாளிகள் நீல நிற ஹொண்டா சிவிக் ரக வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் Rymal வீதி மற்றும் Tomken வீதிப் பகுதியில், குறித்த அந்த வானம் எரிந்தவாறு காணப்பட்டதாகவும், தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மொன்றியலில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 28 வயது ஆண் ஒருவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரும் மொன்றியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 38 வயதான ஜேசப் பலோட்டா என்பவர் மீது நாடு தழுவிய அளவில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.