ரொரன்ரோ Bathurst Street பகுதியில் பாரிய தீப் பரவல்! ஒருவர் பலி

இன்று காலை வேளையில் ரொரன்ரோ Bathurst Street பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பலத்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Richmond Street Westற்கு தெற்கே, 160 Bathurst Streetஇல் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை 5.30 அளவில் இந்த தீப்பரல் ஆரம்பித்துள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த கட்டிடத்தில் பலத்த தீச் சுவாலைகளும், அந்த பிராந்தியத்தில் கடுமையான புகைமூட்டமும் காணப்பட்டதாகவும், தீப்பரவல் ஏற்பட்ட கட்டிடத்தின் கீழ் தளத்திலிருந்து இருவரைக் காப்பாற்றியதாகவும் ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களில் ஒருவர் மிக மோசமான நிலையிலும், மற்றையவரும் ஆபத்தான நிலையிலும் இருந்ததையும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவர்கள் ஆணா பெண்ணா என்ற விபரங்களோ, அவர்களது பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ உடனடியாக வெளியிடப்படவில்லை.

காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை இறந்துவிட்டதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த அந்த தீ பரவிய கட்டிடத்தின் கூரைப் பகுதி ஊடாக, அயலில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும், முதலில் கட்டிடத்தினுள் நுளைந்த தீயணைப்பு படையினர் அனைவரையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும், தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னமும் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.