கனேடியர்கள் இருவரும் சேர்ந்தே தமது நாட்டு இரகசியங்களைத் திருடினர்: சீனா குற்றச்சாட்டு

சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் சீன அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் இருவரும், அரச இரகசியங்களைத் திருடுவதில் இணைந்தே செயற்பட்டதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.


அடையாளம் குறிப்பிட விரும்பாத சீன அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, சின்ஹூவா செய்தி ஊடகம் இன்று இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் கனேடிய இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங், கனேடிய தொழில் முனைவரான மைக்கல் ஸ்பாவோரின் உதவியுடனேயே சீனாவின் அரச இரகசியங்களையும், உளவுத் தகவல்களையும் திருடி, உளவாளிகளாக செயற்பட்டுள்ளதாக, குறித்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் பாரிய மின்னியல் நிறுவனமான ஹூவாவேயின் நிறைவேற்று அதிகாரியான மெங் வான்ஷோ, அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க வன்கூவரில் வைத்து கனேடிய அதிகாரிகளால் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்படட நிலையில், அவரது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே குறித்த கனேடியர்கள் இருவரும் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி சீன அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது.

அத்துடன் மெங் வான்ஷோ அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை அனுமதிக்கவுள்ளதாகவும் கனடா கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ள நிலையிலேயே, சீன ஊடகம் கனேடியர்கள் இருவர் தொடர்பில் இன்று இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.