அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய வாகனம் விபத்து

மில்ட்டன் பகுதியில் அதிகாரிகளால் போடப்பட்டிருந்த வீதிச் சோதனையை மதிக்காது, அவர்களிடமிருந்து தப்பிச் சென்ற வேளையில் கவிழந்து விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


நெடுஞ்சாலை 7 மற்றும் 5th Line பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஹல்ட்டன் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் விதிமுறைக்கு பணியாது, அவர்களிடமிருந்து தப்பிச் சென்ற அந்த வாகனம், சிறிது தூரத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த நிலையில், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி கால் நடையாக தப்பியோடிச் சென்றதாகவும், சிறிது நேரத்தினுள் அதிகாரிகள் அவரை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள படத்தில், குறித்த அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி அதன் முன்புறம் மற்றும் பின்புறம் பலத் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்தச் சம்பவத்தினை மேற்கோள் காட்டி, குடித்துவிட்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்பதனை காவல்துறையினர் மக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.