நேத்ரா திரைப்படம் கனடாவில் திரையிடப்பட்டது.

இந்திய கனடிய கூட்டுத் தயாரிப்பான நேத்ரா திரைப்படம் இன்று மாலை கனடாவில், யோர்க் சினிமாவில் சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது.


கனடாவில் திரு பரராஜசிங்கம் அவர்களின் சுவேதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் – தமன் குமார் – சுபிக்‌ஷா நடிப்பில் கடந்த பெப்ரவரி 08 ல் இந்தியாவில் வெளியான முழுநீளத்திரைப்படம் நேத்ரா.

இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி டொரோண்டோவிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டதுடன், எமது கனடிய தமிழ் கலைஞர்கள் பெருமளவில் இதில் பங்குபற்றி நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடிய கலைஞர்களான, லிங்கன் நடராஜா, ஸ்டென்சன் அருண், சார்ள்ஸ் தேவசகாயம், கிருபா கிருஷான் , கணபதி ரவீந்தரன், சசிகலா நரேன், கனி, மதுஷா குகநாதன், சுபாஷினி, கார்த்திகா பார்த்தீபன், ஸ்ரீமுருகன் மற்றும் பலர் இந்த திரைப்படத்துக்கு தமது உழைப்பை வழங்கியிருந்தார்கள்.

இன்று மாலை (Feb 24, 2019) கனடாவில் இத்திரைப்படத்தில் நடித்த மற்றும் முன்னின்று ஆதரவு வழங்கியவர்களுக்காக, சிறப்பு காட்சி யோர்க் சினிமாவில் (York Cinema) திரையிடப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக கனடிய கலைஞர்கள் அறிமுகங்களுடன் நிகழ்வை திருமதி சில்வியா பிரான்சிஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

கனடாவின் மூத்த பத்திரிகையாளர், ஊடகவியலாளர், கவிஞர் என பன்முகத்தன்மையை கொண்ட திரு உதயன் லோகேந்திரலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நன்றியுரையை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான திரு, பரராஜசிங்கம் அவர்கள் வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நேத்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருந்தாலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்த திரைப்படம் திரையரங்கை வந்தடைந்தது என்பது ஒரு சாதனை. இன்றைய காலகட்டத்தில் தமிழக திரைப்படங்கள் எதிர்நோக்கும் பெரும் சவால், படங்களை எடுப்பதில் அல்ல எனவும், அது திரையரங்கில் திரையிடப்படுவதிலேயே தாமதங்களும், சவால்களும் உள்ளதெனவும், இந்த சவாலை நேத்ரா திரைப்படம் வெற்றிகொண்டுள்ளது என்பது திரைப்படக்குழுவுக்கும், நேத்ரா திரைப்படத்துக்கும் கிடைத்த பெரும் வெற்றி என தனது நன்றியுரையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

Netra Movie Audio Launch