ஸ்காபரோவில் வீடு இடிந்து வீழந்து விபத்து

நேற்று சனிக்கிழமை ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்து அந்த வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதிலும், அதிஸ்டவசமாக எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை.


கிங்ஸ்டன் வீதி மற்றும் பேர்ச்மெளண்ட் வீதிப் பகுதியில், Harding Boulevardஇல் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று முற்பகல் 11.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தான் குளித்துக் கொண்டிருந்த வேளையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தனது மகனும் பயந்து சத்தமிட்டவாறு தன்னை அழைத்துக் கொண்டிருந்ததாகவும், பொருட்கள் நகரத் தொடங்கிய வேளையில் தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்துவிட்டதாகவும், சுமார் 45 நிமிடங்களின் பின்னர் வீட்டின் வடக்கே உள்ள செங்கல் கட்டுமானம் இடிந்து வீழ்ந்ததாகவும், அந்த வீட்டில் குடியிருந்தவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான தெளிவான காரணம் இன்னமும் தெரியவில்லை என்ற போதிலும், அத்திபாரத்தில் விரிசல் ஏற்பட்மையால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அந்த கட்டிடத்தின் முதலாம் தளம் பெரும்பாலும் முற்றாக இடிந்து வீழ்ந்துவிட்டதாகவும், இதனால் இரண்டாவது தளம் தற்போது பொறுப்பு அற்ற நிலையில் காணப்படுவதாகவும், அருகே உள்ள மேலும் சில வீடுகளில் இருந்தோரையும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றியதாகவும் ரொரன்ரோ தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளை விட்டு வெளியேறியோர் தற்காலிகமாக தங்குவதற்கு பேரூந்துகள் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.