தற்போதய ஆட்சியில் கனடா திறம்படச் செயற்படவில்லை: கருத்துக் கணிப்பு

தற்போதய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், கனடா திறம்படச் செயற்படவில்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலான கனேடியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய லிபரல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனடா மோசமான செயற்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளதாக, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் நாடு திறம்படச் செயற்படுவதாக 22 சதவீதம் பேரும், பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை – முன்னர் இருந்ததைப் போலவே உள்ளது என்று 27 சதவீதம் பேரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தற்போதய அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது என்ற எண்ணப்பாட்டினை கனேடியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக் கணிப்பை மேற்கொண்ட நிறுவனம், கனேடியர்கள் மத்தியில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளாக பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வரி போன்ற விடயங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இணையம் ஊடாக கடந்த 15ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரையில், எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட, வாக்களிக்கத் தகுதி உள்ள 1,500 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.