11 வயது சிறுமி மரணம்: தந்தை கைது!

நேற்று இரவு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 11 வயது சிறுமி ஒருவர், தேடுதல் அறிவிப்பு வெளியாகி சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து (Basement Appartment) சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.


ரொரன்ரோவில் இருந்து வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாடி வீடு ஒன்றின் கீழ் தளத்தில் இருந்து ரியா ராஜ்குமார் (Riya Rajkumar) எனப்படும் அந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையும், சிறுமியின் தந்தையான 41 வயது ரூபேஷ் ராஜ்குமார் (Roopesh Rajkumar, 41) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதையும், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதையும் பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்த சிறுமி தந்தையாருடன் முழு நேரமாக தங்கியிருப்பதில்லை எனவும், தாயுடன் வாழந்து வரும் சிறுமி, அவரது பிறந்த நாளுக்காக தந்தையுடன் வெளியே செல்வதற்கு, மிசிசாகாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 3 மணியளவில் இறக்கி விடப்பட்டதாகவும், மாலை 6.30க்கு அவர் வீடு திரும்புவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நேரத்தினுள் அவர் வீடு திரும்பாததை அடுத்து தாயார் காவல்துறையைத் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை 3 மணியளவில் அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தன்னையும் மகளையும் துன்புறுத்திக் கொள்ளப் போவதாக ராஜ்குமாரிடம் இருந்து தகவல் கிடைத்ததாகவும் தாயார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் ஒன்ராறியோ மாநில காவல்துறை ஊடாக தேடுதல் (AMBER ALERT) அறிவித்தல் விடுக்கப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்தின் பின்னர் அந்த அறிவித்தல் மீட்டுக் கொள்ளப்பட்டது.

பிரம்டனில் இருந்து வடக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில், நெடுஞ்சாலை 11இல், Orillia பகுதியில் வைத்து ராஜ்குமாரைக் கைது செய்த ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் (OPP) அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், சிறுமி சடலமாக மீட்கப்பட் பிரம்டன் வீட்டுக்கும் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் என்ன தொடர்பு என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

ரூபேஷ் ராஜ்குமார் இந்தியவம்சாவளி சார்ந்தவர் என்றும் குறித்த வீட்டின் ஒரு பகுதியிலேயே (Basement) ரூபேஷ் ராஜ்குமார் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகின்றது.

ரியா ராஜ்குமார் Meadowvale Village Public School இல் தரம் 5 இல் கல்வி கற்று வருவதாகவும், ஒரு சிறந்த மாணவி என்றும் பள்ளி நிர்வாகம் இன்று தனது கீச்சு (Twitter) பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்று காலையில் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட தகவலின்படி, ராஜ்குமார் மீது இதுவரை எதுவித குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.