ஸ்காபரோவில பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்காபரோ West Hill குடியிருப்பு பகுதியில் நேற்று (Feb 12, 2019 3 PM) பட்டப்பகல் வேளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Galloway வீதி மற்றும் Lawrence Avenue East பகுதியில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாடடினை அடுத்து, அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கே மனித கொலை குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் குறித்த அந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து கறுப்பு இன ஆண் சந்தேக நபர் ஒருவர் வடக்கு நோக்கித் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்பு நிற ஆடை மற்றும் குளிர் அங்கியினை அணிந்திருந்த அவர், தன்னுடன் ஒரு பயணப் பொதியையும் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், அவர் துப்பாக்கியுடன் சென்றிருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.