ஜொடி வில்சனின் பதவி விலகல் ஏமாற்றமளிக்கிறது: பிரதமர் ட்ரூடோ

முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மனிடோபா மாகாண தலைநகர் வினிபெக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த பிரதமர், ”அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குள் ஜொடி வில்சன் பதவி விலகியுள்ளார். ஆனால், அமைச்சரவை மாற்றத்தினால் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கவில்லை.

அமைச்சரவை மாற்றம் குறித்து எவருக்கும் அதிருப்தி காணப்படின் அது தொடர்பாக என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அனைவரதும் கடமை” எனத் தெரிவித்தார்.

முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சன் பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.