மிசிசாகா வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் இன்று காலையில சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகி்றனர்.

Burnhamthorpe Road West மற்றும் Ridgeway Drive பகுதியில், Rushton Crescentஇல் உள்ள வீடு ஒன்றுக்கு, இன்று காலை 7.15 அளவில் அழைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அங்கு சென்ற போது, அந்த வீட்டினுள் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து ஆண் ஒருவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ற தகவல்கள் எதனையும் காவல்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை.

தற்போது குறித்த இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, காணாமல் போனோர் குறித்த விசாரணைப் பிரிவினரும், மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் இன்னமும் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், குறித்த அந்தப் பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தோ, உயிரிழந்தவருக்கும் கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே எவ்வாறான உறவு என்பது தொடர்பிலும் தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.