பண மோசடி: 17பேர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, பாரிய சட்டவிரோத சர்வதேச பண பரிமாற்ற வலைப்பின்னல் தொடர்பில் கனேடிய மத்திய காவல்துறையினர் 17பேரை கைது செய்துள்ளனர்.

இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த தகவலை வெளியிட்டுள் கனேடிய மத்திய காவல்துறையினர், குறித்த அந்த மோசடிக் கட்டமைப்பு மொன்றியல் மற்றும் ரொரன்ரோ ஆகிய இடங்களில் செயற்பாடுகளை கொண்டிருந்ததாகவும், மொன்றியலில் உள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணம், இந்த அமைப்பு மூலம் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த அந்தக் குழு லெபனான், ஐக்கிய அரபு இராட்சியம், ஈரான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி, பின்னர் அந்தப் பணத்தினை போதைப் பொருள் ஏற்றுமதியாகும் கொலம்பியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாகவும், இவ்வாறாக பல மில்லியன் பொறுமதியான டொலர்கள் பண்டமாற்று செய்யப்பட்டுள்தாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இவ்வாறான விசாரணைகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் முக்கியமான ஒன்று எனவும், குண்டர் கும்பல்களுடன் தொடர்புடைய மிகவும் அரிதான பணப்பரிமாற்ற செயற்பாடாக இது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை தொடர்பில மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளை அடுத்து, நேற்று திங்கட்கிழமை 300க்கும் அதிகமான மத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அமுலாக்கப் பிரிவினர் இணைந்து, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனைகளில், போதைப் பொருட்கள், ரொக்கப்பணம், 32.8 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட 17பேர் மீது, சதி மோசடி, போதைப் பொருட்களை கடத்தலுக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.