கனடா மாணவி சோபியா மீதான வழக்கு: தமிழிசை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கனடா மாணவி சோபியா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் கனடாவில் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 3-9-2018 அன்று பயணம் செய்த சோபியா, அதே விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையைப் பார்த்து, “பாசிச பாஜக அரசு ஒழிக” என கோஷமிட்டார். முன்னதாக, தான் பாஜகவுக்கு எதிராக கோஷமிடப் போவதாக டுவிட்டரில் சோபியா தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் தரையிறங்கியதும் சோபியாவுடன் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் சோபியா நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். சோபியா கைதுக்கு அரசியல் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சோபியா கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, சோபியா கைது ட்விட்டரில் இந்தியளவில் ட்ரண்டாகியது குறிப்பிடத்தக்கது.

சோபியா தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சாமி, தாயார் மனோகரி. இவரது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். சோபியா ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்எஸ்சி இயற்பியல் படித்துள்ளார். அதன்பின் கனடாவில் எம்எஸ்சி கணிதம் படித்தார். தற்போது அவர் கனடாவில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து வருகிறார்; கனடாவில்தான் வசித்து வருகிறார்.

கனடாவில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய சோபியா சென்னையில் சில திருமண நிகழ்வுகளுக்கு சென்றுள்ளார். அதன்பின், அங்கிருந்து நேரடியாக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போதுதான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

இதனிடையே சோபியா மீது தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, “இந்த வழக்கு தனக்கு முற்றிலும் எதிரான வழக்கு, நான் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், எனது மனுவை எந்தப் பரிசீலனையும் செய்யாமல் என் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது, எனவே இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மேல்விசாரணை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று (11-2-2019) விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வார காலம் நீட்டித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை ரத்து செய்வது குறித்து புகார் மனுதாரரான பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.