மூன்றாவது ஒட்டாவா ஐஸ் ட்ராகன் படகு விழாவில் சீன, கனடா அதிகாரிகள் பங்கேற்பு

கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற 3 வது பனிச் சறுக்கு ட்ராகன் படகோட்ட விழாவில் கனடா மற்றும் சீனாவின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினமும், நேற்றும் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் கனடாவிற்கான சீன தூதரகத்தாலும், கனடா சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தாலும் ஒன்றிணைக்கப்பட்ட குழுவினர் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வு உலகின் மிகப் பெரிய பனிச்சறுக்கு பந்தயமாக கருதப்படுகிறது.

சுமார் 125 குழுக்கள் ஒட்டாவா நோக்கி படையெடுத்ததுடன், அமெரிக்கா, பிரித்தானியா, உக்ரேன் மற்றும் தென் கொரிய நாடுகளைச் சேர்ந்த பனிச் சறுக்கு படகு போட்டியாளர்களும் இதில் பங்கேற்றனர்.

இதன்போது, ஒரு ட்ராகன் படகில் 4 பேர் வீதம் போட்டியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக இந்த போட்டி சீனாவின் சந்திர புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடத்தப்படுவது வழக்கம்.