38 மணித்தியாலத்தின் பின்னர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட ஸ்காபரோ தீப்பரவல்

ஸ்காபரோ உடல்வள நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல், 38 மணிநேர பலத்த தொடர் போராட்டங்களின் பின்னர் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஷெப்பேர்ட் அவனியூ மற்றும் மிட்லான்ட் அவனியூ பகுதியில் அமைந்துள்ள “Agincourt Recreation Centre” இல் வியாழக்கிழமை மாலை 4.4 மணியளவில் இந்த தீப்பரவல் ஆரம்பமானதை அடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், இரவு 7.30 அளவில் தீப்பரவல் மேலும் தீவிரமடைந்தது.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் தீப்பரவல் ஓரளவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட போதிலும், கூரைப் பகுதிகளில் தீ தொடர்ந்தும் எரிந்து கெர்ணடிருந்த நிலையில், வெப்ப உணர்கருவிகள் பொருத்தப்பட்ட ஆளில்லா வானூர்திகளின் துணையுடன், தீ உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டு, பாரிய கருவிகளின் உதவியுடன் கூரைப் பகுதியின் தேவையான இடங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன், தொடர்ந்தும் மேற்கொள்ளப்படட நடவடிக்கைகள் இன்று காலை 7.40 அளவிலேயே, சுமார் 38 மணி நேரங்களின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த இந்த உடல்வள நிலையத்தின் சேதாரத்தின் அடிப்படையில் 5 மில்லியன் டொலர்கள் வரையில் காப்புறுதி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனை மீள அமைத்துக் கொடுப்பதாக ரொரன்ரொ நகரபிதா ஜோன் ரொறியும் உறுதியளித்துள்ளார்.