தீப்பரவல் ஏற்பட்ட Agincourt பொழுதுபோக்கு மையத்தை பார்வையிட்டார் ஜோன் ரொறி!

ஸ்காபரோவில் பாரிய தீப் பரவல் இடம்பெற்ற
Agincourt பொழுதுபோக்கு மையத்தை, ரொறன்ரோ நகர பிதா ஜோன் ரொறி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


இதன்போது அவர், அங்கு இடம்பெற்ற அசாம்பாவிதங்கள் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்துக்கொண்டார்.

கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 அளவில் தண்ணீர் தடாகத்தின் மேற்புற கூரையில் பரவத் தொடங்கிய தீ, பின்னர் பெருமளவான பகுதியை தாக்கியது.

அப்பகுதி கட்டுப்படுத்தமுடியாத பெரும் புகை மண்டலம் காணப்பட்டதால், அருகிலிருந்த குடியிருப்பில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, 30 தீயணைப்பு வண்டிகள், நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும், இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இதுவரை சேத விபரங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

குறித்த Agincourt பொழுதுபோக்கு மையத்தில், தற்போதைய குளிர்கால பருவத்தில் 400இற்கும் மேற்பட்ட பாடநெறிகளுக்கு 3000இற்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர்.

இதில், உடற்பயிற்சி வசதிகள், ஒரு உள்ளரங்க நீச்சல் குளம் மற்றும் இரண்டு உட்புற பனி வளையங்கள் ஆகியனவை அடங்கும்.