ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொலை – சிரியாவுக்கு அமெரிக்கா $302 மில்லியன் அபராதம்

அமெரிக்க பத்திரிகையாளர் மேரி கொல்வின் கடந்த 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டமைக்கு சிரிய அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிரியாவின் மேற்கு நகரான ஹோம்ஸில் இருந்து மேரி கொல்வின் செயற்பட்டு வந்த நிலையில், அவர் பணியாற்றிய தற்காலிய ஊடக மையம் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் பிரான்ஸ் ஔிப்படப்பிடிப்பாளர் ரெமி ஒச்லிக் (வயது 28) என்பவரும் உயிரிழந்தார்.

அத்துடன், தற்காலிக ஊடக மையத்தில் இருந்த மேலும் சில ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர் கொல்வினின் சகோதரி கெத்லீன் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் கடந்த 2016ஆம் ஆண்டு தமக்கு நீதி கோரி வழக்குத் தொடுத்தனர்.  வெளிநாட்டு இறையாண்மை சமுதாய சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் அவர்கள் தமது கூற்றுக்களை வலியுறுத்தினர்.

நியமிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதியளிக்கின்றது.

இந்தநிலையில் சிரிய அரசாங்கம் குறித்த வழக்கில் பிரசன்னமாவதை தவிர்த்துவந்த நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அவரின் மரணத்திற்கு இழப்பீடாக 300 மில்லியன் டொலர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.