பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களுக்கு கறுப்பு நாள் – கனடிய மண்ணிலும் இந்நாளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

பெப்ரவரி 4: ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள்/கறுப்பு நாள்!


இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.

கனடிய மண்ணிலும் உலகத் தமிழர் வாழும் பல நாடுகளிலும் துக்க நாள்/ கரி நாள் போராட்டங்கள் இந்நாளில் நடைபெறவுள்ளன.

பல்கலைக்கழகத்தில் இன்று ( சனவரி 31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர் விடுதலை வரலாற்றில் யாழ். பல்கலைக்கழகம் ஒரு மாபெரும் சக்தியே.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது மிகச்சிறப்பானதும். முனைப்பு மிக்கதுமாகும். தொடரும் இவ் உந்து சக்தியானது மிகப் பலமானதாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் நடத்திய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

பின்னர் கேப்பாப்பிலவில் நில மீட்புக்காக போராடும் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் நாட்களில் கேப்பாப்பிலவு மக்கள் நடத்தவுள்ள ‘காணிக்கு போக சுதந்திரமில்லை‘ போராட்டத்துக்கும் தமது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

அவ்வகையில் இலங்கை சுதந்திரதினத்தை துக்கதினமாக அனுட்டிக்க முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினத்தன்று தமிழ் மக்களை காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் மற்றும் கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் குதித்துள்ள மக்களிற்கு ஆதரவளித்து ஒன்று திரள மாணவர் அமைப்பு கோரியுள்ளது.

கனடிய மண்ணிலும் உலகத் தமிழர் வாழும் பல நாடுகளிலும் துக்க நாள்/ கரி நாள் போராட்டங்கள் இந்நாளில் நடைபெறவுள்ளன.