அகதிகளுக்கான வீடுகளுக்காக 114 மில்லியன்

கனடாவில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மாநில மற்றும் நகர நிர்வாகங்களுக்கு 114.7 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு கனேடிய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


கனடாவுக்குள் வந்துசேரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, அவர்களுக்கான தங்குமிடங்களையும் சமூக உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்புககளில் மாநில நிர்வாகங்களுக்கு அழுத்தங்களை அதிகரித்துள்ள நிலையில், கனேடிய மத்திய அரசினால் நேற்று திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட 2.5 பில்லியன் புதிய செலவுத் திட்டத்தில் குறித்த இந்த நிதிப் பங்களிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள வீட்டு வசதிகளுக்கும் மேலதிகமாக தேவைப்படும் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்கும், ஏனைய தேவைகளை ஈடுசெய்வதற்குமான மாநிலங்கள் மற்றும் நகர நிர்வாகங்களின் நிதித் தேவைகளுக்கு பங்களிபப்பாக மத்திய அரசின் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த கோடை காலத்திலும் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிட்டோபா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு 50 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக இந்த 114.7 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.