மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி: டில்லியில் கவிஞர் சேரன் பேச்சு!

மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது தமிழ்மொழி என கனடாவின் டொரோண்டோ பல்கலைகழகப் பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் கூறியுள்ளார். இவர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் (ஜேஎன்யூ) இந்திய மொழிகள் துறையில் சொற்பொழிவாற்றினார்.


இத்துறையின் தமிழ்ப் பிரிவில் புலம்பெயர் இலக்கியம் குறித்த உரையரங்கம் நேற்று நடைபெற்றது. “புலம்பெயர் இலக்கியம்; இடப்பெயர்வும் அடையாளச் சிக்கல்களும்” எனும் தலைப்பில் கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:

புலம்பெயரும் நிகழ்வை புலம்பெயர்வு – புலப்பெயர்வு எனப் பாகுபடுத்தலாம். இதில் புலம்பெயர்வு என்பது எவ்விதக் கட்டாயமுமின்றி தானாக இடம்பெயர்வது.

ஆனால், புலப்பெயர்வு என்பது கட்டாயத்தின் பேரிலான குடியேற்றம். இதற்கு பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் நெருக்கடி, வாழ்வியல் நெருக்கடி போன்றவை காரணிகளாக அமைகின்றன. புலம்(ப்)பெயர்வுக்கு பின்னரும் தங்களுக்குள் பாகுபாடு பார்க்கும் சூழல் இன்றும் நிலவுகிறது.

மானுடத்தை அறிந்துகொள்ளும் மானுடவியல், சமூக விஞ்ஞானத் துறைக் கல்வியை கற்பனையும் படிமத்தையும் விடுத்து முன்னெடுக்க முடியாது. பழைமை வாய்ந்த செவ்வியல் மொழிகளில் தமிழ்மொழி மட்டும் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டுத் திகழ்கிறது.

அதனை மத எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. சமணம், புத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம், என எல்லாவற்றுக்கும் பொதுவானது. அதேபோல், நிலவரையறைகளுக்கும் அப்பாற்பட்டது தமிழ் மொழி. அதனாலே தான் ’தமிழ்கூறு நல்லுலகம்’ எனும் தொடர் உருவாக்கம் பெற்றிருக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கவிஞர் சேரனின் ‘காடாற்று’ குறித்து உதவி பேராசிரியர் நா.சந்திரசேகரனும் ‘திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ குறித்து ஆய்வு மாணவர் த.க.தமிழ்பாரதனும் பேசினர்.

நூல்கள் வெளியீடு

நிகழ்வின் நிறைவில் கவிஞர் சேரன் எழுதி சமீபத்தில் வெளியான ‘அஞர்’ மற்றும் ‘திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.