போலி கனடியக் கடவுசீட்டு வைத்திருந்த இலங்கையருக்கு 8 மாதம் சிறை.

போலி கனடியக் கடவுசீட்டுடன் சிங்கப்பூரைக் கடக்க முயன்ற இலங்கையருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவருக்கும் 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயது பரராசசிங்கம் பூவேந்தன் போலிக் கனடிய கடவுசீட்டை வைத்திருந்தார்.

அவருக்கு உடந்தையாக இருந்த 48 வயது மாரிமுத்து சுப்பிரமணியன், போலிப் பயணப் பத்திரங்களை வைத்திருந்தார். சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

இலங்கைக்கு வெளியே வேலை தேடும் நோக்கில், பரராசசிங்கம் போலி கனடியக் கடவுசீட்டைப் பெற்றார். அதில் அவரின் நிழற்படம் இருந்தது. ஆனால் விவரங்கள் அவருடன் ஒத்துப்போகவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மாரிமுத்துவுடன், கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு வரப் பரராசசிங்கத்தின் முகவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் தங்களின் சொந்த இலங்கைக் கடவுசீட்டுகளைப் பயன்படுத்துவது திட்டம்.

பின்னர் போலிக் கடவுசீட்டைப் பயன்படுத்தி பரராசசிங்கம் மெல்பர்ன் செல்ல மாரிமுத்து உதவ எண்ணினார்.

சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில், சிங்கப்பூர் அதிகாரிகள் போலிக் கடவுசீட்டு வைத்திருந்த பரராசசிங்கத்தைக் கைதுசெய்தனர்.

கொழும்பு திரும்பவிருந்த மாரிமுத்து சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் கைது செய்யப்பட்டார்.