டொரோண்டோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை

டொரோண்டோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கெனடி வீதி மற்றும் நெடுஞ்சாலை 401 பகுதியில், Dundalk Driveவில் உள்ள சொகுசு அடுக்கமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11.50 அளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நபர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் டோரோடோவைச் சேர்நத 36 வயதான லிங்கதாசன் சுந்தரமூர்த்தி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் திங்கட்கிழமை இடம்பெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், தற்போதைக்கு 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 3 ஆண்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் தேடப்படுபவர்கள் குறித்த அடையாளங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.

அதேவேளை குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், குறித்த அந்த நபர் இலக்கு வைக்கப்பட்டு திட்டமிட்டே சுடப்பட்டதாக சந்தேகிப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால் அனைத்துவித காரணிகளையும் மறுதலிப்பதற்கு இல்லை என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: http://torontopolice.on.ca/newsreleases/42995