ரொறொன்ரோவை வந்தடைந்தார் சவுதி பெண்!

கனடாவில் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட சவுதி பெண், ரொறொன்ரோவைச் வந்தடைந்துள்ளார்.


இஸ்லாத்தை துறந்த சவுதி பெண்ணான ரஹாஃப் மொஹமட் அல்-குனன் (வயது-18) அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் வழியில் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டார். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவர் தலைநகர் பாங்கொக்கில் தடுத்துவைக்கப்பட்டதோடு, அவருக்கு அவுஸ்ரேலியா அல்லது கனடா அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும் தாய்லாந்து கோரிக்கை விடுத்தது.

இந்நிலையிலேயே, அவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) அவர் ரொறொன்ரோவை வந்தடைந்துள்ளார்.

அவரை ரொறொன்ரோ விமான நிலையத்திலிருந்து வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரீலான்ட் அழைத்துச் சென்றார்.

துணிச்சல்மிக்க புதிய கனேடிய பிரஜை என குறித்த பெண்ணை கிறிஸ்டியா பிரீலாண்ட் வர்ணித்துள்ளார். அத்தோடு, அவர் புதிய வீட்டிற்கு வருகைதந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் தனக்கு கல்விகற்பதற்கும் தொழில் செய்வதற்குமான சுதந்திரம் இல்லையென தெரிவித்துள்ள ரஹாஃப் மொஹமட் அல்-குனன், தமக்கு ஏற்றாற்போல கல்விகற்று தொழில்செய்யும் சுதந்திரம் கிடைக்கவேண்டுமென்றும் கூறியுள்ளார்.

ஆனால், குடும்பத்தார் தனது தலைமுடியை வெட்டி, ஆறுமாத காலமாக தனியறையில் அடைத்துவைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். தன்னை கொலைசெய்துவிடுவார்களோ என்ற அச்சம் காணப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உடல் உள ரீதியில் தாம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட அல்-குனன், அதன் பின்னரே வீட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தனது மகளின் பாதுகாப்பு தொடர்பாகவே தாம் கரிசனை கொண்டிருந்ததாக அல்-குனனின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அல்-குனனுக்கு அகதி அந்தஸ்து வழங்கலாமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், தற்போது கனடா அவரை ஏற்றுக்கொண்டதை ஐ.நா. அகதிகளுக்கான முகவரகம் பாராட்டியுள்ளது.