ஐ.பி.சி தமிழா ஊடக சந்திப்பு டொரோண்டோ

IBC தமிழ் ஊடகக் குழுமம் தனது பயணத்தின் ஒரு அங்கமாக, கனடா டொரன்டோவில் IBC தமிழா 2019 எனும் ஒரு மேடை நிகழ்ச்சியை இவ்வாண்டு ஜூன் 29ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது.


1000 எமது தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 29ம் திகதி Scotiabank Arena வில் (Air Canada Centre) நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவ் ‘IBC தமிழா – டொரன்டோ 2019’ நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தையும், அந்த நிகழ்ச்சியின் பரிமாணங்கள் பற்றிய கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளுவதற்காக ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று இன்று (Jan 12, 2018) Markham Convention Centre இல் மாலை நடைபெற்றது.

பிரமாண்டமான மண்டபத்தில் பிரமாண்ட மேடையில் கலை நிகழ்வுகளுடன் ,கேள்வி பதில் மற்றும் உணவுகளுடன் விழா சிறப்பாக அமைந்திருந்தது.

ஊடகவியலாளர் சிறப்பு சந்திப்பு என்று அழைக்கப்பட்டு 4 மணிநேரத்துக்கும் கூடுதலான நேரம் நடைபெற்ற நிகழ்வில் 30 நிமிடங்கள் மட்டுமே கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த 30 நிமிட நேரத்திலேயே கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் மூவரின் அறிமுகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பது இவ்விழா பற்றிய மேலதிக தகவல்களை பெறும் நிலையை இல்லாமல் செய்துவிட்டது.

இந்த நிகழ்விற்கு பொறுப்பான ஐ.பி.சி தமிழ் நிர்வாகிகளான தினா, டெல் மற்றும் டொரோண்டோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு கிஷான் ஆகியோர் அவர்கள் அறிமுகங்களோடு வருகையாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளித்திருந்தனர். திரு ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்கள் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இது ஒரு ஊடக சந்திப்பு என்று கூறப்பட்டாலும் வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரு விழாவுக்கு விருந்தினர்கள் போலவே வந்திருந்தனர்.

சிலர் தருணம் பார்த்து தங்கள் தொழில் வளர்ச்சிக்கும், தங்கள் உலகளாவிய பார்வைக்காகவும் காத்து இருப்பவர்கள்போலவே காணப்பட்டனர். வேலை வாய்ப்புக்களுக்கு சிலர். படம் காட்ட சிலர், படம் எடுக்கச் சிலர்; இப்படி நிறைவு பெற்றது இன்றைய சிறப்பு ஊடக சந்திப்பு.

நிறைவாக பேசிய திரு. பாஸ்கரன் கந்தையா தான் கேள்விகள் பெரிதாக தம்மை நோக்கி வீசப்படும் என்றும், 5 நாட்கள் இந்த ஊடக சந்திப்புக்கு தயார் செய்ததாகவும், ஆனால் எல்லாம் “சப்பென்று” போய்விட்டதாகவும் அவர் பேச்சில் ஒரு நக்கல் தொனி… இதை அவர் தவிர்த்திருக்கலாம். அவருடைய சில பேச்சுக்கள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் அமைந்திருந்தது.

அவர் செய்யும் பணிக்கு அவரது இந்த பேச்சு தன்னை தானே தரம் தாழ்த்தினதாகவே இருந்தது.

மேலும் திரு பாஸ்கரன் கந்தையா (IBC Tamil Chairman) தனது பேச்சில் தெரிவித்த IBC யின் நோக்கங்களும், அதன் எதிர்கால திட்டங்களும், IBC யின் கனவுகளும் அனைவராலும் வரவேற்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

விழா வெற்றி பெற டொரோண்டோ தமிழின் வாழ்த்துக்கள்.

Photo Credits: Selfie Moment of Event Senthuran Shanmugarajah