புத்திசாதுர்யமான பிரதமரினாலேயே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை சாத்தியம்: ஸ்டீபன்

புத்திசாலித்தனமான பிரதமர் ஒருவரினூடாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தைகளை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என, கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை குறிப்பிடாது மறைமுகமாக அவரை தாக்கி முன்னாள் பிரதமர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயருடனான குழுக் கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்காவுடனேயே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, கனடாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பேணுவதற்கு இரு நாடுக்கும் இடையே வலுவான உறவு பேணப்பட வேண்டும்.

ஆனால், கனடா அமெரிக்காவின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஜி-7 மாநாட்டை தொடர்ந்து ட்ரூடோ போலியான அறிவிப்புகளை விடுப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்தார்.

இதேவேளை, ட்ரூடோ அமெரிக்காவின் முதுகில் குத்துவதாகவும், அவரது மோசமான இராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு நரகத்தில் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.