கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மௌனம் காக்கும் சீனா!

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதில் சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது.

இதற்கிடையில் இந்த செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என சீனா கூறியுள்ளது.

குறிப்பாக தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதனை தெரிவிப்பதை தாம் விரும்பவில்லை என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.

கனேடியர்களான மைக்கல் கோவ்றிங் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகிய இருவரும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக கூறி சீனாவில் வைத்து அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான முறுகல்நிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்த்ககது.

சீனாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹூவாவேயின் உயர்நிலை நிதி அதிகாரியான மெங் வான் ஷோ, அமெரிக்காவின் வேண்டுகோளின் அடிப்படையில் வன்கூவரில் வைத்து கனேடிய மத்திய பொலிஸார் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இருவரும் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.