2019 இல் ஒன்ராறியோ சாரதிகளுக்கு கடுமையான புதிய நடைமுறைகள்!

விதிமுறைகளுக்கு மீறி வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகள் ரொறன்ரோவிலும் புதுவருடம் முதல் நடப்பிற்கு வருகிறது.


ஒன்ராறியோ மாகாண அரசு விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகளை நேரில் இருந்து நடப்புக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையிலேயே எந்த விதமான தாமதமும் இன்றி ரொறன்ரோவிலும் குறித்த விதிமுறைகள் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில், தவறு செய்யும் சாரதிகள் மீதான தண்டப் பணம் அதிகரிக்ப்படுவதுடன், சாரதி அனுமதிப் பத்திரமும் பறிமுதல் செய்யப்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை விதிமுறைகளுக்கு மாறாக, கவனச் சிதறலுடன் செலுத்திச் சென்று முதன்முறையாக அகப்படும் ஒருவருக்கு, ஆயிரம் டொலர்கள் வரையில் தண்டன் விதிக்கப்படக்கூடும் என்பதுடன், அவரது சாரதி அனுமதிப் பத்திரம் 3 நாட்களுக்கு தடை செய்யப்படும் எனவும், அனுமதிப்பத்திர புதுப்பிப்புக்கான புள்ளிகளில் 3 குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது முறையாகவும் பிடிபடுவோர், இரண்டாயிரம் டொலர்கள் வரையில் அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதுடன், ஏழு நாட்களுக்கு அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் எனவும், மேலும் 3 புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு பின்னரும் இந்த குற்றச் செயல் தொடர்பில் பிடிபடுவோரின் சாரதி அனுமதி பத்திரம் ஒரு மாதத்திற்கு தடை செய்யப்படும் என்பதுடன், மேலும் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 3,000 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறான கடுமையான தண்டனைகள் மூலம், சாரதிகள் வாகனங்களைச் செலுத்திச் செல்லும்போது, தமது கவனத்தை வேறு விடயங்களில் செலுத்தாது, வீதியிலேயே அதிக கவனத்தைச் செலுத்தி பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்திச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.