ரொறன்ரோவில் புத்தாண்டிலும் தொடரும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்

துப்பாக்கி வன்முறையில் கடந்த ஆண்டு மோசமான சாதனை படைத்திருந்த ரொறன்ரோவில் புத்தாண்டின் முதல் நாளிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் நினைவிழந்து கிடந்த நபருக்கு முதலுதவி வழங்கி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வித உயிராபத்தும் இல்லை என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரொறன்ரோவில் கடந்த ஆண்டு 424 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதில் 51 பேர் உயிரிழந்ததுடன், 184 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.