கனடிய ஈழ எழுத்தாளர் தமிழ்நதிக்கு ஆனந்தவிகடனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது

சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி’யின் மாயக்குதிரை சிறுகதைக்கு ஆனந்தவிகடனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

இனத்தின் வலியை பதிவு செய்த ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி

‘அரசியல் ஆழமிக்க படைப்புகளில் ஒரு துளியும் கலையம்சம் குன்றிவிடாமல் எழுதுவது தமிழ்நதியின் பெரும்பலம். தமிழ்நதியின் வழக்கமான மொழிநடை இத்தொகுப்புக் கதைகளில் இன்னும் செழுமையேறி, கதை பயணிக்கும் தளங்களுக்கே வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.

தவிர்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளில் அகதியாகத் தஞ்சம் புகுந்தவர்களின் வாழ்நிலையும், அங்கு வாழ நேர்கையில் அறிமுகமாகும் புதிய பழக்கங்களும் எப்படி வாழ்க்கையின் பகுதியாகின்றன. ஈழப்போருக்கு முன் குடியிருந்தவர்களைத் தேடி அலையும் அவலப் பயணம் என்று வெவ்வேறு கருப்பொருள்களைக்கொண்ட கதைகள் இவை. ஈழத்தமிழ் இலக்கியத்தில் போராட்டத்தின் வரலாற்றை, துயரத்தின் வடுக்களை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை வலிமையாய் முன்வைக்கும் மிகமுக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு மாயக்குதிரை.

சிதிலமாக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்டது மாயக்குதிரை சிறுகதை மூலம் கவனிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்நதி. போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருக்கிறது.

வலிமையான தனது எழுத்தின் மூலம் மனிதம் பேசியிருக்கிறார் தமிழ்நதி. ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்நதி, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவருகின்றார்.

ஈழத்து பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் தமிழ்நதி, அண்மையில் வெளியான மாயக்குதிரை சிறுகதை தொகுப்பு மூலம் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார். 2018ம் ஆண்டின் மிக முக்கிய சிறுகதைத் தொகுப்பில் மாயக்குதிரையும் உள்ளடங்குகின்றது.

விருது பெரும் தமிழ்நதியை டொரோண்டோ தமிழும் வாழ்த்துகின்றது.