கனடா நாட்டவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு : சீன உயர் நீதிமன்றம்

சீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டவர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று சீன உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கு, சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜதந்திர சர்ச்சையை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ரொபர்ட் லொய்ட் (Robert Lloyd) என்ற கனேடிய நாட்டவர் சீனாவின் டாலியன் (Dalian) நகருக்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவர், நாளை (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று லியோனிங் (Liaoning) மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீனாவில் போதைப்பொருள் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது வழக்கம். எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் கனடா அரசாங்கம் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

ஏற்கனவே, ஹூவாவி நிறுவனத்தின் உயர் அதிகாரியை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, கனடா கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சீனாவின் பாதுகாப்பிற்குக் பங்கம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில், இரண்டு கனடா நாட்டவர்கள் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மற்றொருவர் கைதுசெய்யப்பட்டபோதும், அவரது விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், ஹூவாவி அதிகாரியின் கைதிற்கு பின்னர் சீனாவில் கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேகநபராக ரொபர்ட் லொய்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

அண்மைய சம்பவங்கள் சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசலை அதிகரித்துவரும் தருணத்தில் இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.