எரிபொருள் விலைகளில் ‘ஏற்ற இறக்கம்’ – அடுத்த ஆண்டு விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

உலக எண்ணெய் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்ததால் கனடாவின் பெரும்பகுதிகளில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டு எரிபொருளின் விலை அதிகரிக்க கூடும் என எரிபொருள் விலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 18 மாதங்களாக குறைவாக இருந்த எரிபொருளின் விலை கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக மேலும் வீழ்ச்சியடைந்தது என ஒரு மூத்த பெட்ரோலிய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், கடந்த புதன்கிழமை சராசரியாக வழக்கமான எரிபொருள் விலைகள் லிட்டர் ஒன்றுக்கு 17 சென்ட் குறைவடைந்து.

குறிப்பாக அல்பர்ட்டா மற்றும் ஒன்ராறியோ, மனிடோபாவில் 12 சென்ட்சும், கியூபெக்கில் ஆறு சென்ட்சும், நோவா ஸ்கோடியாவில் 11 சென்ட்சும், நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடரில் மூன்று சென்ட் குறைவடைந்தது.

அந்தவகையில் அமெரிக்க பெஞ்ச்மார்க் மேற்கு டெக்சாஸ்ஸில் எண்ணெய் விலை கிறிஸ்மஸ் தினத்தன்று 42.53 அமெரிக்க டொலராகவும் இருந்தது. இது ஒக்டோபர் 3 ஆம் திகதி 76.41 அமெரிக்க டொலர் ஆக இருந்த விலையில் இருந்து 44 விகிதம் குறைவடைந்துள்ளது.

இதன் பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை 46.22 டொலராகவும் வியாழக்கிழமை அதனை விட குறைவாகவும் காணப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வரும் நிலையில் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் எரிபொருள் விலை நிர்ணயிப்பதில் எண்ணெய் சந்தையில் “தீவிர ஏற்ற இறக்கம்” இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக அடுத்த ஆண்டில் எரிபொருள் விலை தொடர்பில் நிச்சயமான முடிவுகளை அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.