புத்தாண்டில் கனடாவின் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்பு!

தபால் முத்திரைகளின் விலை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கனேடிய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, கனடாவிற்குள் கடிதங்களை அனுப்புவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 1.05 அமெரிக்க டொலர் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு கடிதங்களை அனுப்புவதற்கான கட்டணம் ஏழு முதல் 20 சதத்தினால் அதிகரிக்கப்படும் அதேவேளை, பிற வெளிநாடுகளுக்கான அஞ்சல் கட்டணம் 15 முதல் 20 சதத்தினால் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல் முறையாக 2019ஆம் ஆண்டில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த கட்டண அதிகரிப்பானது தபால் துறை வருமானத்தை 26 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கச் செய்யும் என கனேடிய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.