கனேடியர்களின் கைது உலகளவில் எதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது: பிரதமர்

சீனாவில் இரு கனேடியர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் கனடாவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் எதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ட்ரூடோ அங்கு செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் நன்மை கருதி குறித்த இரு கனேடியர்களையும் விடுவிப்பது, மிகவும் அவசியமானதென்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் பிரபல தொழிலதிபரும் வர்த்தக ஆலோசகருமான Michael Spavor மற்றும் கனேடிய முன்னாள் ராஜதந்திரியான Michael Kovrig ஆகிய இருவரும் கடந்த 10ஆம் திகதி சீனாவில் கைதுசெய்யப்பட்டனர். சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் தடைகளை மீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ கனடாவில் கைதுசெய்யப்பட்டு, தற்போது கடும் நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்பின் கீழான பிணையில் உள்ளார். இதற்கு பழிவாங்கும வகையிலேயே கனேடியர்கள் சீனாவில் கைதாகியுள்ளதாக கனடா குற்றஞ்சாட்டி வருகின்றது.