கனேடியர் இருவரையும் விடுவிக்குமாறு சீனாவிடம் கனடா கோரிக்கை

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு கனேடியர்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,
கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் சீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சீன அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள எழுத்து மூலமான கோரிக்கையில், இந்த மாதத்தின் தொடக்கதில் கனேடியர்கள் இருவரை சீன அதிகாரிகள் தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் தாங்கள் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவேயின் உயர்நிலை நிதி அதிகாரியான மெங் வான்ஷோ வன்கூவரில் கனேடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர், இந்த கனேடியர்கள் இருவரையும் சீனாவில் வைத்து சீன அதிகாரிகள் கைது செய்தனர்.

தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அவர்கள் இருவரும் விளங்கியதாக அவர்கள் மீது சீனா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், கனடா சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்படும் ஒரு நாடு என்று தெரிவித்துள்ளார்.

மெங் வான்ஷோ விடயத்திலும் வெளிப்படையான, நீதியான, பக்கச்சார்பற்ற சட்ட நடவடிக்கைகளையே கனடா முன்னெடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவுடனான நாடுகடத்தில் உடன்பாடு உள்ளிட்ட சகல அனைத்துலக கடப்பாடுகளையும் கனடா மதித்து நடக்கின்றது எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் குறிப்பிட்டுள்ளார்.