சவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா!

சவுதி அரேபியாவுடனான பல பில்லியன் டொலர் பெறுமதியான கவச வாகன ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

எனினும், அதிலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கும் சவுதிக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்குப் பின்னர் கனடா கடுமையாக விமர்சித்து வந்தது.

கஷோக்கியின் கொலைக்கு ஆரம்பம் முதலே கனடா தகுந்த பதிலை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் ட்ரூடோ, குறித்த கவச வாகன ஏற்றுமதி ஒப்பந்தம் விரைவில் ரத்துசெய்யப்படுமென கடந்த மாதமும் குறிப்பிட்டிருந்தார். அதன்மூலம் சவுதிக்கு கவச வாகனங்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்ற கஷோக்கி அங்கு கொலைசெய்யப்பட்டதை சவுதி ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு உரிய காரணங்களை முன்வைக்காத நிலையில், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் சவுதியிடம் விளக்கம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.