கனடா – சீனாவிற்கிடையிலான சுற்றுலாத்துறை பிணைப்பு பாதிக்கப்படும் அபாயம்!

சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி கனடாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை பிணைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி செயற்பட்டதாக, ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி மெங் வான்சூ கடந்த முதலாம் திகதி கனடாவில் கைதுசெய்யப்பட்டார். நீண்ட விசாரணையின் பின்னர் கடந்த 11ஆம் திகதி கடும் நிபந்தனைகளும் விடுவிக்கப்பட்டார்.

இவ்விடயம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில், சுற்றுலாத்துறை பாதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

கனடாவிற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான சீன சுற்றுலாப்பயணிகள் வருகைதருவது வழமை. இது கனடாவில் வருமானத்தில் பாரிய பங்களிப்பை செலுத்துகின்றது.

தற்போதைய நிலையில் சீன சுற்றுலாப்பயணிகளில் வருகை குறைவடைந்தால், வருமானத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென சுற்றுலாத்துறையைச் சார்ந்த தொழில்முனைவோர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி மெங் வான்சூ 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படலாமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதுகுறித்து சீனா தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றது. அத்தோடு, அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டுமென சீனா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.