இருவல்லரசு நாடுகளிடையே கனடா சிக்கிக் கொண்டுள்ளது: முன்னாள் நீதியமைச்சர்

ஹுவாவி விவகாரத்தில் சீனா, அமெரிக்கா என்ற போர்க்குணமிக்க இருவல்லரசு நாடுகளிடையே கனேடிய லிபரல் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் எர்வின் கொட்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடுகடத்தல் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் நீதிஅமைச்சருக்கு மாத்திரமே காணப்படுவதாக கனேடிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமராக இருப்பினும், அமைச்சரவையாக இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஹூவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கனடா அவரை விடுவித்து தமது நாட்டிடம் ஒப்படைக்க வேண்டுமென சீனா வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், அவரை அமெரிக்காவிற்கு அனுப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளது.

இவ்வாறாக சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில், ஹுவாவி  விவகாரத்தில் சீனாவுடனான நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.