ஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்ட அவரிடம் கடந்த மூன்று தினங்களாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 பில்லியன் கனேடிய டொலர்கள் ரொக்கப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, 24 மணிநேர கண்காணிப்பில் அவர் இருப்பார் என்றும், அதற்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் சாரதி ஒருவரும் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். ஜி.பி.எஸ். தொழிநுட்பம் மூலம் அவர் கண்காணிக்கப்படுவதோடு, இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை வெளியில் செல்ல முடியாதென்றும் உத்தரவிட்டுள்ளார்.

மெங் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லையென்றும், அவர் சிறந்த நடத்தையுடையவர் என அறியப்பட்டவர் என்பதை நீதிமன்றம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் நீதிபதி தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சீனாவின் ஹூவாவி நிறுவன தலைமை நிதி நிர்வாகி மெங், கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நோக்கி பயணித்தபோது கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் நிலை ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சீனா மற்றும் கனடாவிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கனடாவின் முன்னாள் தூதுவர் மைக்கேல் கோவ்ரிக் சீனாவில் நேற்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.