வரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம்

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நீடிக்கும் வரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவின் அலுமினியம் மற்றும் உருக்கு இறக்குமதிக்கு முறையே 25 மற்றும் 10 வீத வரியை அமெரிக்கா கடந்த மே மாதம் 31ஆம் திகதி விதித்தது. அதற்கு பதிலடியாக 16.6 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு கனடா வரிவிதித்தது.

எனினும், இரு தரப்பு வரிகளையும் நீக்கி சுமூகமான உறவை தொடர கனடா விரும்புவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், அது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கனேடிய மக்கள் விரும்பும் மற்றும் நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்களை தமது அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.