பருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’!

தொழிற்புரட்சி யுகத்திற்கு முன்னரை விட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது சுமார் 1 டிகிரி அளவு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒரு டிகிரி வெப்பநிலை என்பது சாதாரண விடயம் அல்ல. மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக கரையோர தாழ் நிலத்தில் உள்ள நகரங்கள் கடல்நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

அது கடல் நீர்மட்டம் அதிகரித்தல், பெருங்கடலில் வெப்பநிலை மாற்றம் மேலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவதில் சிக்கல் போன்ற நிலைமைகளை தோற்றுவிக்கும். 2018 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 0.98C ஆகும்.

அதாவது இந்த சராசரி அளவு 1850-1900 ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையை விட அதிகம் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கனடா நாட்டை சேர்ந்த மார்கரெட் அட்வுட், கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் என பன்முக திறமை கொண்டுள்ளார்.

‘தி மொமண்ட்’ எனும் அவருடைய கவிதை மனித குலத்திற்கும், சூழலியலுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக மூன்று பத்திகளில் விவரிக்கும் .

‘மனிதன் ஒன்றுமே இல்லை’

‘எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக, எல்லாவற்றையும் சொந்தமாக்கி கொண்டதாக மனிதன் கருதுகிறான். ஆனால், இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றும் இல்லை’ என்ற பொருளில் அந்த கவிதை செல்லும்.

இந்த கவிதையை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். உலகில் அதிக வெப்பநிலை கடந்த 22 ஆண்டுகளில்தான் பதிவானதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டளவில உலகின் வெப்பநிலையில் சுமார் 3-5C அதிகரிக்கும்.

பசுமை இல்ல வாயு

அமெரிக்கா, சீனா , இந்தியா ஆகிய நாடுகளே உலகளவில் பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்றன.

இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றலில் 40 சதவீதத்திற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், பாரீஸ் பருவநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

அந்த நேரம் அமெரிக்க தொழில்களையும், வேலையாட்களையும் பாதிக்காத புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இப்படியான சூழலில் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த அக்டோபர் மாதம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையை விட 1.5 பாகை செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை அந்த அறிக்கை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.