சிறுமி, தாய் மீது கத்திக்குத்து – சந்தேகநபரின் அண்மைய நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிஸார்!

பெண்ணொருவரையும் அவரது மகளையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபரின் அண்மைய நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஸ்காபரோ டான்ஃபோர்த் வீதி மற்றும் மக்கவன் வீதிப் பகுதியில், கடந்த 23 ஆம் திகதி இரவு 6.40 அளவில் இடம்பெற்ற இந்த மிக மோசமான வன்முறைச் சம்பவத்தில், 16 வயது சிறுமி ஒருவர் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் உயிராபத்தான நிலையிலும், 37 வயது பெண்ணும், பாரதூரமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அங்கிருந்து தப்பித்துச் சென்றவர் றொரன்ரோவைச் சேர்ந்த 46 வயதான ஹரி ராஜ்குமார் எனவும், பாரதூரமான தாக்குதல் உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் கடந்த 24 ஆம் திகதி ATM இயந்திரத்தின் ஊடக பணம் பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த புகைப்படத்தை பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த அந்த நபர் ஆயுதங்களுடன் ஆபத்தானவராக காணப்படக்கூடும் என்றும், எனவே அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ள அதேவேளை தகவல் தெரிந்தால் அழைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.