ஹூவாவெய் திறன்பேசி நிறுவன உலகத் தலைமை நிதி நிர்வாகியை விடுவிக்குமாறு கனடாவிடம் கோரிக்கை

ஹூவாவெய் திறன்பேசி நிறுவன உலகத் தலைமை நிதி நிர்வாகி வான்கூவர் நகரில் வைத்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்குமாறு கனடாவை சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார் என்றும், கனடிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்படுகின்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக்கூடும் என்று கனேடிய நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்ட ஹூவாவெய் திறன்பேசி நிறுவன உலகத் தலைமை நிதி நிர்வாகி மெங்கை விடுவிக்குமாறு சீனத் தூதரகம் கனடாவிடம் கோரியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவுடனான தனது உறவில் விரிசல் அதிகமாகலாம் என்று தாம் அஞ்சுவதாகுவும் சீனா கூறியுள்ளது.

ஹூவாவெய் தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் கைது பற்றி அமெரிக்காவும், கனடாவும் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், இந்த கைதானது மனித உரிமை மீறலாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஏற்றுமதி தடைச் சட்டத்தை மீறி, வாஷிங்டனின் தயாரிப்புகளை ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததாக, 2016 ஆம் ஆண்டிலிருந்து ஹூவாவெய் நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஹூவாவெய், சாம்சங்கிற்கு அடுத்தாக இரண்டாவது பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.