நிகழ்ச்சிநிரலில் குளறுபடி: பிரதமர் ட்ரூடோவுடனான சந்திப்பு குறித்து விமர்சனம்!

கனேடிய மத்திய அரசுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், மாகாண பிரச்சினைகளை பேச போதிய நேரம் ஒதுக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள இச்சந்திப்பில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

எனினும், மத்திய அரசின் நிகழ்ச்சிநிரலில் மாகாண பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர்கள் குறிப்பிடுகின்றனர். இது, மாகாண பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் புறந்தள்ளுவதாக அமைந்துள்ளதென முதலமைச்சர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மனிடோபா முதலமைச்சர், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிராந்தியங்களினால் நாட்டின் பல மாகாணங்கள் பாதிப்பை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மனிடோபா முதல்வர், இதுகுறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதென்றும், அதனை பிற்போட முடியாதென்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமருடனான சந்திப்பு குறித்த நிகழ்ச்சிநிரலை மாற்றவேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாற்றிக் காட்டுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், நாட்டின் சக்திவள உற்பத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நேரத்தை, நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டுமென கோரி பிரதமர் ட்ரூடோவிற்கு அல்பேர்டா முதலமைச்சர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பானது, குழப்பத்தை தோற்றுவிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.