ரொரன்ரோ நகர மண்டபத்தில் நுளைவதற்கு இனி புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

ரொரன்ரோ நகர மண்டபத்தில் நுளைபவர்கள் மீது இனி புதிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

நாளை புதன்கிழமை நடப்பிற்கு வரவுள்ள இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி, ரொரன்ரோ நகர மண்டபத்தில் நுளையும் விருந்தினர்கள் அனைவரும், “மெட்டல் டிட்டெக்டர்” சோதனைகளின் பின்னரே நகர மண்டப உட்பகுதிக்குள் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

அனைத்து தனி நபர்களுக்குமான குறித்த இந்த சோதனைகள் நகர மண்டபத்தின் மூன்றாவது மாடியில் மேற்கொள்ளப்படும் எனவும், பைகள் பொதிகள் மீதான ஊடுகதிர் சோதனைகள் முன்னர் இடம்பெற்றதைப் போலவே நகர மண்டபத்தின் வட்டக் கொட்டகைப் பகுதியில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர மண்டபத்தின் பாதுகாப்பு நுளைவு அட்டைகளை வைத்துள்ள நகர மண்டப உத்தியோகத்தர்கள், நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனைகள் ஊடாக செல்ல வேண்டியதில்லை எனவும் ரொரன்ரோ மாநகரசபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.