கனடாவில் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்ற நபர் கைது!

கனடாவைச் சேர்ந்த ஒருவர் எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் ஆட்டிஸம் போன்ற பல நோய்களை குணமாக்கும் மருந்தை விற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Stanley Nowak (67) என்பவர் பல பாரதூரமான நோய்களை குணமாக்கும் மருந்து என்று கூறப்படும், கனிய உப்புகள் அடங்கிய திரவம் என்று அழைக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய டானிக்கை விற்பனை செய்துள்ளார்.

கனடாவின் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டடுள்ளது. இதன்படி, 17 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின் இரண்டு ஆண்டுகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  கனடாவில் இத்தகைய குற்றத்திற்காக தண்டனை பெறும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புத மினரல் திரவம் (கனியுப்பு) என்று அழைக்கப்படும் டானிக்கின் அபாயம் குறித்து கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சு பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளது.

அற்புத மினரல் திரவம் என்பது உண்மையில் ஆடை தயாரிப்பில் துணிகளை வௌிர வைப்பதற்காக பயன்படுத்தப்படும் மற்றும் சலவைக்காக பயன்படுத்தப்படும் சோடியம் குளோரைட் (Sodium chlorite) எனப்படும் வேதிப்பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவமே என்று ஆய்வுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதை உட்கொண்டால், நச்சுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இரத்த சிவப்பணுக்கள் பாதிப்பு உட்பட பல மோசமான உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.