கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் சகோதரர் கலாபூசணம் சிவலிங்கம் காலமானார்!

இலங்கையின் பிரபல உடுக்கு கலைஞன், யாழ் – பொலிகண்டி, வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று (28-11-2018, புதன்கிழமை) காலமானார்.


இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல், சுருள் வாள், மடு, தீப்பந்த விளையாட்டுக்கள் மற்றும் கூத்துக் கலை போன்ற கிராமியக்கலைகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த திரு.தில்லையம்பலம் தவராசா (சிவலிங்கம்) அவர்கள் நேற்று (28-11-2018, புதன்கிழமை) அதிகாலை காலமானார்.

கலாபூசணம் சிவலிங்கம்
கலாபூசணம் சிவலிங்கம்

இவரின் கலைப்பணிகளை பாராட்டி சிலம்புச்சக்கரவர்த்தி, கலைப்பிரதி, சிலம்பாசான் போன்ற பட்டங்களும், கிராமியக்கலை சார்பாக 2014ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் தில்லை சிவலிங்கம் அவர்கள் வல்வை முத்துமாரி அம்மன் திருவிழாவில் கிராமிய உடுக்கு பாடல்களில் பாடுவதில் மிகவும் பிரசித்திபெற்றவர். மாரியம்மன் வாசல் பாட்டுக்கு அவரது குரலும், அவரது உடுக்கு ஒலியும் தனித்துவமானது. இன்னமும் வடக்கு கிழக்கு கிராமங்களில் நாட்டுப்புற கிராமிய பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் இவர்களால் பேணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஐம்பது வருடங்களாக இத்தொண்டை ஆற்றிவருகின்றார் தளபதி சூசையின் மூத்த சகோதரர் கலாபூசணம் தில்லை சிவலிங்கம் அவர்கள்.

கடற்புலிகளின் தொடக்க காலங்களில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவருடைய பங்களிப்பும் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொகுதி கடற்புலிப்போராளிகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத்தந்த ஆசான் இவர். தமிழீழ எழுச்சி நாட்களில் வானில் வெளிச்சவீடு ஏற்றும் பொறிமுறையை போராளிகளுக்கு கற்றுத்தந்தவர். கடற்புலிகளின் அரசியல்துறையினரின் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழர் வரலாற்று பாரம்பரிய மேடை நாடகங்கள், கூத்துக்கள், கரகாட்டங்களில் தானே பாத்திரமேற்று நடித்து போராடும் உணர்வை மக்களுக்குள் கொண்டுசெல்ல அயராது உழைத்தவர்.

சிறுவயதில் தந்தையை இழந்த தனது தம்பி சூசையை அண்ணனாக மட்டுமின்றி தந்தையுமாய் நின்று தாங்கி வளர்த்த தாயுமானவர்.

இறுதிப்போரில் தனது தம்பியான கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் இழப்பால் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்தார்.

Sea Tiger commander Soosai
Sea Tiger commander Soosai

முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், மே 18, 2009 ம் திகதி தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, உடுக்கை மட்டும் சுமந்து கடல்வழியாக நடந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வந்தவர் கலாபூசணம் தில்லை சிவலிங்கம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிலுக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

TorontoTamil.com