தமிழகத்தில் கண் விழித்தது முதல் விடுதலைப்புலி மாவீரன் நடுகல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரன் சத்தியநாதன் (லெப் சங்கர்) மறைந்த நாளையே மாவீரர் நாளாக தமிழர்கள் உலகளவில் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.  லெப். சங்கர் அவர்கள் மதுரையில் தான் தன் இறுதி முச்சை நிறுத்தினார், ஆதலால், அவர் மதுரையிலேயே விதைக்கப்பட்டிருந்தார் என்பது தமிழக மக்கள் பெருமையோடு நினைவுக்கூற வேண்டிய நிகழ்வு ஆகும்.  இந்நிலையில், முதல் மாவீரனின் நடுகல் பதித்த இடத்தில் பல வருடங்களாக நினைவுகூரல் நடாத்தப்பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது.  ஆனாலும், இந்த வருடம் அந்தக் குறையைத் தமிழக உணர்வாளர்கள் களைந்துள்ளனர்.  முள்ளிவாய்க்கால் முற்றம் போல சங்கரின் விதைகுழி மகிமைப்படுத்தப்படவேண்டும் என்று அங்கு வீரவணக்கம் செலுத்திய உணர்வாளர்கள் கருத்துவெளியிட்டனர்.


அதோடு, மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளை தமிழகத்தின் பெருந்திரள் பொது மக்கள் துணையோடு நடத்த முயற்சி எடுப்பதே வீரியமாக அமையும் என தமிழக பத்திரிகையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க, தஞ்சாவூர் வடக்கு வாசலில் “நாத்திகர் இடுகாடு” என்னும் இடத்தில், லெப். போசன் அவர்களின் நினைவுக் கல்வெட்டு ஒன்றும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக இணையதள செய்திகள் வழியே அறிய முடிந்தது.

“பட்டுக்கோட்டை அழகிரி உட்பட அன்றைய கால திராவிட இயக்கத் தூண்கள் பலரது வித்துடல் இந்த நாத்திகர் இடுகாட்டில் விதைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயினும் இன்று பராமரிப்பற்று முட்செடிகள் நிறைந்த காடாய் காட்சி அளிப்பதாக” தஞ்சையைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கருத்தியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

2009ற்கு முன்னர் தமிழகத்தில் அரசியல், சமூக இயக்கங்கள் மட்டுமே மாவீரர் நினைவு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வந்த நிலையில், 2009ற்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்கள் இயக்கங்களாகவோ, குழுக்களாகவோ, தனித்தனியாக வீடுகள் வழியாகவோ மாவீரர் நினைவு நிகழ்ச்சிகளை உணர்வுப்பூர்வமாக நடத்தத் தொடங்கியிருந்தனர்.

அதேவேளை, பழ.நெடுமாறன் அவர்களின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் (தஞ்சாவூரில்), 2013ற்கு பின்னர் வருடம்தோறும் மாவீரர் நாள் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம், இன்னும் சிறப்பாக, முதல் மாவீரர் என்றழைக்கப்படும் லெப்.கேணல் சங்கர் அவர்கள் மடிந்து, வித்துடல் அடக்கம் செய்யப்பட்ட மதுரையில் பொது மக்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

மதுரையில் மாவீரர் சங்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியவர்களில் ஒருவரான கவிதமிழ் தன் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர், “தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த தளபதி சங்கரின் உயிர் பிரிந்தது நான் பிறந்த மதுரையில் என்கிற செய்தியை மட்டும் அறிந்திருந்த எனக்கு, இந்த ஆண்டுதான் எரியூட்டபட்ட இடம் குறித்த தகவல்கள் தெரிய வந்தது.  கடந்த சில ஆண்டுகளாக எந்த நிகழ்வை தவரவிட்டாலும் எம் இனம் காக்க போராடி வீரச்சாவினை தழுவிய மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் மட்டும் தவறாது கலந்து கொண்டிருக்கிறேன்.

“தமிழகத்தில் சில ஆண்டுகளாக பொதுவெளியில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த காவல்துறையும் அரசும் அனுமதி மறுத்து வந்த நிலையில், தமிழின உணர்வாளர்கள் ஏதேனும் அரங்கத்தில் ஒன்று கூடி வீரவணக்க நிகழ்வுகளை முன்னெடுத்து வந்தனர்.  பொதுவெளியில் மக்கள் மத்தியில் இந்த கூட்டம் நடைபெறாமல் வருவது மிகுந்த மனவேதனையை தந்தது.

“இன்று மதியம் வரை ஒருவித மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்த பொழுது, சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தளபதி சங்கர் எரியூட்டப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என எண்ணம் வந்தது.  அதன்படி நண்பர் அரவிந்தனுடன் மதுரை கீரைத்துறை மயானத்தில் கேட்பாரற்று கிடந்த அந்த தகன மேடைக்கு மெழுகுவர்த்தி விளக்குகளுடன் சென்று சரியாக தளபதி சங்கர், தலைவர் பிரபாகரன் மடியில் உயிர் நீத்த அந்த தருணத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினோம்” என்றார்.

2013இல் தமிழகத்தில் மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தவரில் ஒருவரான பிரபாகரன் இதுகுறித்து செய்தித்தளத்திடம் தெரிவித்த கருத்தில்,

“தமிழர் தாயக விடுதலைக்காக போராடி களப்பலியான முதல் மாவீரர் சங்கர் அவர்களை நினைவு கூர்ந்து உலகமெங்கும் நினைவு எழுச்சி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தும், மதுரையில் இதுவரை தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு உரிய மரியாதையையும் எழுச்சி நிகழ்வுகளை நடத்தியதில்லை.

“அதோடு, மாவீரர் கல்லறைகளை சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் சிதைத்து வருவதாக குற்றம்சாட்டுக்களை நாம் சுமத்திக் கொண்டே, நம் கண் முன் இருக்கும் பெருமைமிகு முதல் மாவீரர் கல்லறையை பேணிக் காக்காது குப்பைக் காடாய் வைத்திருக்கிறோம்” என்று வருத்தப்பட்டார்.

மேலும் கருத்துக் கூறிய பிரபாகரன், “2009இல் தமிழீழ மக்களுக்கு எதிராக நடந்த கொடும் போரை நிறுத்த தன் உயிரை தியாக செய்த வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் உடல் இறுதியாக வைக்கப்பட்ட இடம் கூட இன்று குப்பைகள் கொட்டும் இடமாக மாறி நிற்கிறது” எனவும் வேதனைப்பட்டார்.

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள், உங்கள் இந்தியப்பயணங்களின்போது இவ்விடங்களுக்கும் சென்று உங்கள் மரியாதையை செலுத்த இந்த செய்தி உதவும் என்று இங்கு பகிர்கின்றோம்.


தமிழருக்கு தெரியாத மிகப் பெரும் ஈழ பொக்கிஷம் தஞ்சை மண்ணில்.