ரொரான்ரோவில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நினைவு அனுஷ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் (கார்த்திகை 27) இன்றாகும்.


உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாள் ஆண்டுதோறும் பேரெழுச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.

கனடா, மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் (Markham Fair Ground) வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வு பூர்வமாக இன்று (Nov 27, 2018) நினைவு கூறப்பட்டது.

மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட்டில் (Markham Fair Ground), கனேடிய தமிழர் நினைவெழுச்சி அகவம், ஒழுங்கு செய்த மாவீரர் நாளின் மூன்று நிகழ்வுகளிலும் பெருந்திரளான மக்கள் வருகை தந்து, தமது தாயக உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.

காலை 7 மணி, மதியம் 1.00மணி, இரவு 7.00 மணி என்று ஒழுங்கு செய்ய பெற்றிருந்த மூன்று நிகழ்வுகளும் ஒன்றிணைந்த மக்களது வருகையினால் நிகழ்வுகள் எழுச்சிபெற்று நடைபெற்றது.

எழுச்சி நடனங்கள், வானம் பாடிகளின் தாயக விடுதலைப் பாடல்கள். நாடகம், இளையோரின் நிகழ்ச்சிகள், உரை என்று மாவீரர்களின் நினைவோடு அரங்கம் பேரெழுச்சி பெற்றுத் திகழ்ந்தது.

கடும் குளிருக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்த அந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து சென்றார்கள்.

Photo Credit: Guna (Seithy.com)