சென் மைக்கல்ஸ் கல்லூரியின் அதிபர்- சபைத் தலைவர் ஆகியோர் பதவி விலகல்

சென் மைக்கல்ஸ் கல்லூரியின் அதிபர் மற்றும் சபைத் தலைவர் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக, சென் மைக்கல்ஸ் பாடசாலை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொடர்பிலான தாக்குதல் மற்றும் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

பாடசாலை சபைத் தலைவர் அருட்தந்தை ஜெஃபெர்சன் தோம்சன் மற்றும் கல்லூரி அதிபர் கிரெக் றீவ்ஸ் ஆகியோர் உடனடியாக நடப்புக்கு வரும் வகையில் பதவி விலகுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி விலகிய அந்த இருவரும் பாடசாலைக்காகவும், மாணவர்களுக்காகவும், அவர்களின் நலன்கள் மற்றும் கல்வி விருத்திக்காகவும் எப்போதும் முன்னின்று உழைத்தவர்கள் எனவும், அவ்வாறே மீண்டும் இன்றும் அவர்கள் செயற்பட்டுள்ளார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய சம்பவத்திலிருந்து உடனடியாக மீண்டு, பாடசாலை சமூகத்தை முன்னகர்த்திச் செல்வதற்காக இந்த இருவரும் துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் எடுத்துள்ள இந்த முடிவினை வரவேற்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.