கனடாவில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் படுகொலைகள் அதிகரிப்பு

கனடாவில் தேசிய படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பே இப்படுகொலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த ஆண்டு மாத்திரம் 660 கொலைக் குற்றங்கள் பதிவாகியிருப்பதாக நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான படுகொலைகளில், துப்பாக்கிச் சூட்டின் மூலமான படுகொலைகள் வியத்தகு உயர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புலனாய்வுத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கில் 86 பில்லியன் டொலர்களை செலவிட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.